×

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மாநகரில் 5 இடங்களில் மறியல்; 250 பேர் கைது

ஈரோடு,  டிச. 9: ஈரோட்டில் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக  மாநகரில் 5 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் கைது  செய்தனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட மசோதாவை கண்டித்தும்,  திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகரில் சூரம்பட்டி நால் ரோடு, வீரப்பன்  சத்திரம், மூலப்பாளையம் போன்ற 4 இடங்களில் மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இதில், சூரம்பட்டி நால் ரோட்டில் நடந்த போராட்டத்திற்கு நகர  கமிட்டி உறுப்பினர் பொன்பாரதி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர்  சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள  வேளாண் சட்டங்கள், மின் திருத்த மசோதா, தொழிலாளர் நலச்சட்ட தொகுப்பு  போன்றவற்றை திரும்ப பெற்று, விவசாயிகள், விவசாயம், தொழிலாளர் நலன்  காக்கும் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள்  எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் போராட்டம்  நடத்தி வரும் விவசாயிகளை ஒடுக்காமல், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண  வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உட்பட்ட  36 பேரை போலீசார் கைது செய்தனர்.

லப்பாளையம், வீரப்பன்சத்திரம்,  மூலப்பட்டறை போன்ற இடங்களிலும் மறியலில் ஈடுபட்ட 174 பேரை போலீசார் கைது  செய்தனர். சோலார் பகுதியில் தந்தை பெரியார் திராவிட கழகம்  சார்பில், நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட அணி செயலாளர் சந்திரன் தலைமை  தாங்கினார். இதில், மாவட்ட அமைப்பாளர் ஜபரூல்லா, மாவட்ட மாணவரணி  அமைப்பாளர் கபிலன், நகர இளைஞர் அணி செயலாளர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட 40 பேரை  போலீசார் கைது செய்தனர்.
நெற்கதிருடன் ஆர்ப்பாட்டம்:  டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசு புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழர் கழகம் கட்சியின் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் கைகளில் நெற்பயிருடன், பச்சை துண்டு அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கோபியில் 60 பேர் கைது:
மத்திய அரசு கொண்டு  வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று நாடு  முழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு  விடுத்து இருந்தது. அதைத்தொடர்ந்து கோபி, கரட்டூர், நல்லகவுண்டன் பாளையம்,  மொடச்சூர், கரட்டடி பாளையம், கொளப்பலூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட  இடங்களில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், உணவகங்கள், வணிக  நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தினசரி மார்க்கெட் முழு அளவில்  அடைக்கப்பட்டன. ஆட்டோ, சுற்றுலா கார், வேன்கள் இயங்கவில்லை. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கினாலும் பயணிகள் வருகை  குறைவாகவே இருந்தது. பொது வேலை நிறுத்தம் காரணமாக கோபி மற்றும்  சுற்றுப்புற பகுதியில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டது.

போராட்டத்திற்கு ஆதரவாக பேருந்து நிலையம் முன்பு மறியலில்  ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று  நம்பியூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக கடைகள் மூடப்பட்டது.  கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது  செய்யப்பட்டனர். இதேபோல, நம்பியூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள்  தொழிற்சாலைகள் மூடப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 35 பேரை  நம்பியூர் போலீசார் கைது செய்தனர். மொடக்குறிச்சி: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று மொடக்குறிச்சி, கொடுமுடி, சிவகிரி பகுதிகளில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டன. இதே போல் அரச்சலூர், அவல்பூந்துறை, எழுமாத்தூர், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

Tags : places ,city ,
× RELATED கலெக்டர் அலுவலக வளாகம் உட்பட குமரியில் 18 இடங்களில் தானியங்கி மழைமானி