×

இரண்டாம் சீசனுக்கு குன்னூர் காட்டேரி பூங்காவில் 1.5 லட்சம் மலர் நாற்று நடவு

குன்னூர் : நீலகிரியில் இரண்டாம் சீசனுக்கு இயற்கை எழில் கொஞ்சும் குன்னூர் காட்டேரி பூங்காவில் 1.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி நேற்று துவங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் மலர் நடவு செய்வது வழக்கம்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள காட்டேரி பூங்காவில் 2ம் சீசனுக்கு நடவு பணிகள் நேற்று துவங்கியுள்ளது‌. தோட்டக்கலை உதவி இயக்குநர் நவநீதா தலைமையிலான தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் பூங்கா ஊழியர்கள் நாற்றுகளை நடவு செய்து பணிகளை துவங்கி வைத்தனர். முதற்கட்டமாக பிரன்ச், மேரிகோல்டு மற்றும் பால்சம் செடிகள் நடவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு வகைகளை சேர்ந்த நாற்றுகள் நடவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு இரண்டாம் சீசனுக்கு 1.5 லட்சம் மலர் நாற்றுகள் பூங்காவில் பல்வேறு பகுதிகளில் நடவு செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட மலர் செடி ரகங்கள் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, போன்ற நாடுகளை தாயகமாகக் கொண்ட டேலியா, சால்வியா, பிளாகஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, ஹோலிஹாக், டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா, ஸ்வீட், வில்லியம் உட்பட பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நடவு பணிகளில் தற்போது பூங்கா ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வரும் இரண்டாம் சீசனில் இந்த நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளில் பூக்கள் பூத்து குலுங்கி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Gunnar Vampire Zoo ,Kunnur Vampire Park ,Nilgiri ,
× RELATED அரசு பணிகளில் இட ஒதுக்கீடு...