பழநி, ஆக. 14: நாடு முழுவதும் வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது வழக்கம். இதன்படி பழநியில் இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சண்முக நதி ஆற்றங்கரையில் கரைக்கப்பட உள்ளன.
இதற்காக பழநியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம், நீரில் கரையும் வகையிலான பொருட்களை கொண்டு பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும், அனுமதிக்கப்பட்ட அளவுகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சிலை தயாரிப்பு கூடங்களில் சிலைகளை தயாரிப்பதற்காக சேலம், விழுப்புரம் பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
