சீர்காழி, ஆக. 14: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தது. புகாரின் பேரில் நகராட்சி ஆணையர் மஞ்சுளா உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் நகராட்சிக்கு உட்பட்ட பிடாரி மேலவீதி, மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பைகள் பயன்படுத்துவது சோதனையில் தெரியவந்தது. தொடர்ந்து சுமார் 60 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்து ரூ.3 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து பாலித்தீன் பைகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
