சிவகங்கை, ஆக.14: காளையார்கோவில் அருகே புரசடிஉடைப்பு கிராமத்தில் திறந்தவெளி சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் அலெக்ஸ்பாண்டி(33) என்பவர் சிறை வார்டனாக கடந்த 2020ம் ஆண்டு முதல் பணிபுரிந்தார். அவரது பணி காலத்தில் சிறை கைதிகளின் ஊதியம் மற்றும் இதர செலவினம் உள்ளிட்ட பண பரிவர்த்தனைகளில் போலியான சலான் மற்றும் மின்னணு செலுத்து சீட்டுக்களை தயாரித்து அதனை அரசு பதிவேட்டில் பதிவு செய்து அரசு பணம் ரூ.39லட்சத்து 30ஆயிரம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இப்புகார் குறித்து விசாரணை நடத்த மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் உத்தரவின் பேரில் சிறப்பு தணிக்கை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நடத்திய விசாரணையில் திறந்த வெளிச்சிறையில் அலெக்ஸ்பாண்டியன் பணம் மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை சிறைச்சாலைகளின் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
