சிங்கம்புணரி, ஆக.14: சிங்கம்புணரி அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார். சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் கட்டுக்குடி பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி மகன் நந்தகோபால்(22). அந்தமானில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த நந்தகோபால் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜா(22) இருவரும் டூவீலரில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது வெள்ளியங்குடி பட்டி அருகே பொன்னமராவதி நோக்கி சென்ற சரக்கு வாகனம் எதிரே டூவீலர் மீது மோதியது. இதில் நந்தகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த ராஜா காலில் பலத்த காயம் ஏற்பட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
