சின்னசேலம், ஆக. 14: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் போயர் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(40). இவரது மனைவி ராஜாமணி(37). இந்த தம்பதிக்கு சிவா(18), லாவண்யா என்ற இருபிள்ளைகள் உள்ளனர். இதில் மகன் சிவா 12ம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் சிவா கடந்த 11ந்தேதி கச்சிராயபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அரசு பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று பஸ்நிலையத்தில் பேசிக்கொண்டிருந்த சிவாவை வடக்கநந்தல் பகுதியை சேர்ந்த பரத், பாலு, தினேஷ், சுரேஷ், திலிப் ஆகியோர் சேர்ந்து கட்டையால் அடித்து திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிவாவின் தாய் ராஜாமணி கொடுத்த புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
