×

நாகை புதுஆர்ச் சுடுகாடு அருகே உள்ள தற்காலிக குப்பை கிடங்கால் குடியிருப்புவாசிகள் அவதி

நாகை, டிச.8: நாகை கோட்டை வாசல்படி அருகே நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் நாகை, நாகூர் சுற்று வட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பைகளை தரம் பிரிக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இதன் காரணமாக புது ஆர்ச் சுடுகாடு அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாகை புது ஆர்ச் அருகே மெயின் ரோட்டில் அமர்ந்து மரக்கட்டைகளை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, எங்கள் பகுதியில் 100க்கும் மேற்பட்டடோர் குடும்பத்துடன் வசித்து வருகிறோம்.

இங்கு குப்பைகள் கொட்டப்படுவதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. அதில் ஏற்படும் புகை மூட்டத்தின் காரணமாக மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறு நோய்கள் ஏற்படுகிறது. மேலும் குப்பை லாரிகள் கண்மூடித்தனமாக செல்வதால், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. ஒரு மாதம் மட்டும் தற்காலிகமாக உங்கள் பகுதியில் குப்பைகளை கொட்டுகிறோம் என்று சொல்லிவிட்டு 4 மாதங்களுக்கும் மேலாக குப்பைகள் கொட்டி வருகின்றனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் குப்பைக்கிடங்கில் இருந்து துர்நாற்றத்தால் வசிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே இந்த தற்காலிக நகராட்சி குப்பை கிடங்கை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் காரணமாக திருவாரூர்-நாகை சாலையில் 30 நிமிடத்திற்கும் நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Residents ,garbage dump ,crematorium ,Nagai New Arch ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ