கல்லூரி மாணவர்களுக்கு பழைய பேருந்து பயண அட்டை செல்லும்

கரூர், டிச. 8: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில், டிஎன்பிஎல் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக அந்த பகுதியினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் நேற்று மாலை அந்த பகுதிக்கு சென்ற போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலை நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி பின்னர் புகளூர் வாய்க்காலில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: கழிவு நீர் புகளூர் வாய்க்காலில் கலப்பதால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆலை கழிவுகளை சுத்திகரிப்பு செய்த பிறகே வெளியேற்றப்பட வேண்டும் என்ற ஆணை உள்ளது. அதனை முறையாக ஆலை நிர்வாகம் பின்பற்ற வேண்டும். கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் பழைய பேருந்து அட்டையையே பயன்படுத்திக் கொள்ளலாம். கொரோனா காலம் என்பதால் புதிய அட்டைகள் தற்போது வழங்கப்படவில்லை. எனவே, பழைய பேருந்து அட்டையையே பயன்படுத்திக் கொள்ளலாம். கரூர் மாவட்டத்தில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளூர் தேவைக்கு மணல் அள்ள அனுமதி கேட்டுள்ளனர். அவற்றை பரிசீலனை செய்து 5 இடங்களை கண்டறிந்து முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக விரைவில் அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டுறவு சங்கம் துவக்கம்: கரூர் மாவடடம் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வடமலைக் கவுண்டனூரில் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் திறந்து வைத்து பால் கொள்முதலை துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: கரூர் குளிரூட்டும் நிலையம் நாளொன்றுக்கு 50ஆயிரம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்டதாகும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினமும் 2,768 லிட்டர் பால் உள்ளூர் விற்பனையாக செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் சராசரியாக தினமும் 5,500 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

மாதந்தோறும் 235 மெட்ரிக் டன் கால்நடை தீவனம் மற்றும் ரூ.7 லட்சத்து 37ஆயிரம் மானியமாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தாது உப்புக்கலவை சராசரியாக மாதந்தோறும் 2 டன் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஒன்றிய கால்நடை மருத்துவர்கள் மூலம் சுமார் 1536 கால்நடைகளுக்கு பால் உற்பத்தி செய்யும் உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கிராம பகுதிகளில் கறவை மாடு வைத்திருக்கும் விவசாயிகளிடம் இருந்து பாலினை கொள்முதல் செய்வதற்காக கூட்டுறவுத்துறையின் சார்பில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

Related Stories:

>