×

மானாமதுரை அரசு மருத்துவமனையில் 65 வயது மூதாட்டிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

மானாமதுரை, ஏப்.5: மானாமதுரை அரசு மருத்துவமனையில் 65 வயது மூதாட்டிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். 40க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா செய்யாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமன் மனைவி பஞ்சவர்ணம் (65), வலது கால் மூட்டு பகுதியில் தேய்மானம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர் செந்தில்குமார், டாக்டர் திவாகர், தலைமை மருத்துவர் சிந்துஜா, செவிலியர் சற்குணவதி மற்றும் செவிலியர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் கடந்த 21ம் தேதி, அவருக்கு முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

அறுவை சிகிச்சை முடிந்து, முழுவதுமாக குணமடைந்து நல்ல நிலையில் அவர் நடக்க துவங்கியதையடுத்து, நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் கமலவாசன், அவருக்கு பழங்கள் மற்றும் சத்தான உணவுப்பொருட்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து டாக்டர் கூறுகையில், ‘‘கடந்த ஜனவரியில் இடுப்பு எலும்பு முறிந்து சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு, மானாமதுரை அரசு மருத்துவமனையில் முதன் முதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அவர் பூரண குணமடைந்தார். தற்போது பஞ்சவர்ணத்திற்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும். அரசு மருத்துவமனையில் செலவின்றி சிகிச்சை பெறலாம்’’ என்றனர்.

The post மானாமதுரை அரசு மருத்துவமனையில் 65 வயது மூதாட்டிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Government Hospital ,Manamadurai Government Hospital ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...