×

வாழ்க்கையில் வெற்றி அடைய கல்வி அவசியம் முன்னாள் துணைவேந்தர் பேச்சு

காரைக்குடி, டிச. 8:  காரைக்குடி கார்த்திகேயன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் தென்றல் எழுதிய நீசமான எண்ணாதே நீச்சல் அடிக்க கற்றுக்கொடு என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. ஆசிரியர் சரவணன் வரவேற்றார். ஆசிரியர் ஆனந்தா தலைமை வகித்தார். நேஷனல் கேட்டரிங் கல்லூரி தாளாளர் சையது முன்னிலை வகித்தார். நூலினை வெளியிட்டு அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா பேசுகையில், ‘ஒரு புத்தகத்தை எழுத நிறைய புத்தகங்களை வாசிக்க வேண்டும். வளர்ந்து வரும் செல்போன் பழக்கத்தால் இளையதலைமுறையிடம் வாசிப்பு பழக்கம் குறைந்து வருவது வருந்தக்கூடியது. இளையதலைமுறையினர் வாசிப்பை நேசிக்க கற்று கொள்ள வேண்டும். நல்ல வாசகர் தான் சிறந்த புத்தகத்தை எழுத முடியும். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்றால் கல்வி அவசியம்.

கல்வியால் மட்டுமே நாம் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைய முடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும். வாழ்க்கை குறித்து எந்த ஆசிரியர்களும் சொல்லி கொடுப்பது இல்லை. ஆசிரியர்களின் சொல்லுக்கு வலிமை உள்ளது’ என்றார். நிகழ்ச்சியில் கவிஞர் தங்கம்மூர்த்தி, எமர்சன் ஜெல்சிங், தமிழ்மதி நாகராசன், பேராசிரியர் அரசமுருகுபாண்டியன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அன்பரசு பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் தென்றல் ஏற்புரை வழங்கினார். ரிந்தியா தொகுத்து வழங்கினார். கவிஞர் நந்தவனம் சந்திரசேகர் நன்றி கூறினார்.

Tags : Vice Chancellor talks ,
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு