×

கண்மாய்,வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு தண்ணீர் இன்றி தவிப்பதாக விவசாயிகள் புகார்

மதுரை, டிச.8: கொம்பாடி ஊராட்சியில் உள்ள இரண்டு பெரிய கண்மாய்கள் தூர்வாராததால், தண்ணீர் நிரப்ப முடியவில்லை. வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் அருகே கொம்பாடி ஊராட்சியை சேர்ந்த தலைவர் தங்கம் தலைமையில் விவசாயிகள் நேற்று மதுரை கலெக்டர் அன்பழகனிடம் புகார் மனு கொடுத்தனர். இம்மனுவில், ‘‘நிலையூரிலிருந்து விருதுநகர் மாவட்டம் கம்பிக்குடி வரை நிலையூர் கம்பிக்குடி நிலையூர் விரிவாக்க கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாய் தண்ணீர் மூலம் நெடுங்குளம், கொம்பாடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பும். தற்போது கொம்பாடியில் உள்ள கீழக்கண்மாய் மற்றும் மேலக்கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை. இந்த கண்மாய்கள் மட்டும் இதுவரை தூர்வாரப்பட வில்லை. கண்மாய் மூலம் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகிறோம். இதுதொடர்பாக தங்கள் பகுதியில் உள்ள அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் எல்லா கண்மாய்களும் தூர்வாரப்பட்டு தண்ணீர் உள்ளது என அமைச்சர், அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், எங்கள் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லை. வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனை அகற்றி தண்ணீர் நிரப்ப வேண்டும் என தெரிவித்திருந்தனர். கொம்பாடி ஊராட்சி தலைவர் தங்கம் கூறுகையில், ‘‘கொம்பாடி கிராமத்திற்கு சொந்தமான கண்மாய் வரத்துகால்வாயை கிராம மக்கள் சொந்த செலவில் சுத்தப்படுத்தினோம். ஆனால், நெடுங்குளத்தை சேர்ந்தவர்கள் ஜேசிபி மூலம் அந்த கால்வாயை அடைத்து விட்டனர். இதனால், கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், கொம்பாடி விவசாயிகள் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், குடிமராமத்து என்ற பெயரில் பணி நடக்காமலேயே பணி நடந்துள்ளதாக முறைகேடு நடந்துள்ளது’’ என குற்றம்சாட்டினார்.

Tags : Kanmai ,
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாயில்...