கொரோனா தொற்றால் மூடப்பட்ட கல்லூரிகள் திறப்பு ஆர்வத்துடன் வந்த மாணவர்கள்

மதுரை, டிச.8: கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ,மாணவிகளின் வருகை எதிர்பார்த்த நிலையில் இல்லை. கல்லூரிக்கு வந்த மாணவர்கள் சமூக இடைவெளி, முககவசம் அணிந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வந்தனர். உயர்கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கல்லூரிகள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன் பேரில் காமராஜர் பல்கலைக்கழத்திற்கு கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் திறக்கபட்டுள்ளன. இறுதியாண்டு மாணவர்கள் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல கல்லூரிகளில் வருகை மிக குறைவாக தான் உள்ளது.

இதேபோல் விடுதிகளும் திறக்க அனுமதி அளித்துள்ளது. அதில் ஒரு மாணவர் ஒரு அறை என ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பல வெளியூர் மாணவர்கள் வரவில்லை. சில கல்லூரிகள் தற்போதும் திறக்கவில்லை. தொடர்ந்து ஆன்லைன் வகுப்பு நடந்து வருகிறது. அங்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். கொரோனா முற்றிலும் இல்லை என அறிவித்து, முழுமையாக கல்லூரிகள் திறந்தால்தான் மாணவர்கள் வருகை அதிகரிக்கும்’’ என்றார்.இதேபோல் மதுரை மருத்துவக்கல்லூரியிலும் முதலாமாண்டு துவங்கி இறுதியாண்டு மாணவர்கள் வரை அனைவருக்கும் வகுப்புகள் துவங்கின. வகுப்பினை மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி துவக்கி வைத்தார். பேராசிரியர்கள் பாடங்கள் நடத்தினர். எனினும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தது.

Related Stories:

>