கும்பகோணம்,ஆக. 12: கும்பகோணத்தில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க தனி தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் சாலையில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலயம் அருகில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க தனி தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் மறைமாவட்ட முதன்மை குரு பிலோமின் தாஸ் தலைமை வகித்தார். கும்பகோணம் மறைவட்ட முதன்மை குரு கோஸ்மான் ஆரோக்கியராஜ் மற்றும் தமிழக ஆயர் பேரவையின் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் பணிக்குழுவின் மாநில செயலர் நித்தியசகாயம் முன்னிலை வகித்தனர். முன்னதாக கும்பகோணம் எஸ்.சி, எஸ்.டி பணிக்குழு செயலர் இருதயராஜ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக கும்பகோணம் கிஸ்வா அமைப்பின் முகமது யூனுஸ், சமூக ஆர்வலர் செல்வராஜ், பங்கு பேரவை முன்னாள் செயலர் சகாயராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர் வின்சென்ட் மற்றும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜான் கலந்துகொண்டனர். ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜோசப் நவநீதன் சமூக எழுச்சி பாடலை பாடினார். இந்த கூட்டத்தில் கருத்தாளர் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் குடந்தை அரசன், ஒன்றிய அரசு மதத்தின் அடிப்படையில் தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி அந்தஸ்து மறுக்கப்படும் 1950ம் ஆண்டு ஜனாதிபதி ஆணை எண் 3ஐ நீக்கிட வேண்டும். 2004ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை பரிந்துரையை உடனடியாக ஒன்றிய அரசு அமல்படுத்திட வேண்டும்.தலித் கிறிஸ்துவ மக்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும். ஒன்றிய அரசு தமிழக அரசின் தனி தீர்மானத்தை நிறைவேற்றிடவும். தலித் கிறிஸ்துவ மக்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க கோரி ஒன்றிய அரசை எதிர்த்து கண்டன உரையாற்றினார். குடந்தை கிறிஸ்தவ சமூக மக்கள் இயக்கம் தலைவர் மாநில களப்பணியாளர் ஜான் ஜோசப் ராஜ் கண்டன முழக்கமிட்டார். ஆசிரியர் ராசா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிறைவாக மாநால நடுமண்டல ஒருங்கிணைப்பாளர் தமிழரசன் நன்றி கூறினார்.
