×

குளச்சலில் 1 வாரத்திற்கு பின் விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன

குளச்சல், டிச.8: குமரி கடலில் ‘புரெவி’ புயல் அச்சம் நீங்கியதை அடுத்து ஒரு வாரத்திற்கு பின்பு குளச்சல் பகுதி விசைப்படகுகள், கட்டுமரங்கள் மீண்டும் மீன் பிடிக்க சென்றுள்ளன. குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. ஒரு விசைப்படகு ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் தங்கி மீன்பிடித்து வருவது வழக்கம். இந்நிலையில் புரெவி புயல் தாக்கம் காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் துறை அறிவுறுத்தியது. இதையடுத்து குளச்சல் கடல் பகுதியில் ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பி நங்கூரம் பாய்ச்சி மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன. இதுபோல் 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடிக்க செல்ல வில்லை. இதனால் குளச்சலில் கடந்த ஒரு வாரமாக மீன் வரத்து குறைந்தது. ஆனால் ‘புரெவி’ புயல் இலங்கையில் கரையை கடந்து மன்னார் வளைகுடா பகுதியில் வலுவிழந்தது. இதனால் குமரியில் காற்றும், மழையும் வீசவில்லை. லேசான தூறல் மட்டும் இருந்து வருகிறது. குமரியில் புயல் அச்சம் நீங்கியதை அடுத்து விசைப்படகுகள், கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லலாம் என மீன் துறை அறிவித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை முதல் குளச்சல் விசைப்படகுகள், கட்டுமரங்கள் மீன் பிடிக்க மீண்டும் கடலுக்கு செல்ல துவங்கியுள்ளன.  இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Tags :
× RELATED பேச்சு போட்டியில் தொண்டி மாணவி முதலிடம்