×

பூதப்பாண்டியில் குண்டும், குழியுமான ேராட்டில் மீண்டும் விபத்து பைக் மீது டாரஸ் லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி

பூதப்பாண்டி, டிச.8 : பூதப்பாண்டி அருகே பைக் மீது டாரஸ்  லாரி மோதி நடந்த விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தார். சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதை கண்டித்து பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். குமரி மாவட்டம் அருமநல்லூர் புளியடி பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் இறந்து விட்டார். இவரது மகன் சினு (20). எலக்ட்ரீசியன். இவரது நண்பர் ஒருவரின் சகோதரி திருமணம், தடிக்காரன்கோணத்தில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண விழாவுக்கு சென்று விட்டு, சினு  தனது பைக்கில் தடிக்காரன்கோணம் - பூதப்பாண்டி ரோட்டில் வந்து கொண்டு இருந்தார். தோமையார்புரம் அருகே  வந்து கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி, பைக்குடன் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சினு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து அறிந்ததும் பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் விரைந்தனர். சினுவின், உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர்.

 அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விபத்து குறித்து அறிந்து வந்த சினுவின் உறவினர்கள் என ஏராளமானவர்கள் சினு உடலை எடுக்க விடாமல்,  சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் மற்றும் மற்ற வாகனங்களையும் சிறை பிடித்தனர். விபத்து நடந்த சாலை, தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சிக்காக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு 3 ஆண்டுகள் வரை ஆகிறது. ஆனாலும் இந்த சாலை சீரமைக்கப்பட வில்லை. இதுவரை 15 பேர் வரை பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்னர். எனவே  கலெக்டர் அல்லது அதிகாரிகள் வந்து உரிய உறுதிமொழி தர வேண்டும் என்றனர்.  இது பற்றி அறிந்ததும் டி.எஸ்.பி. வேணுகோபால் தலைமையில் போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், இந்த சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிவர தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 4 மணி நேரமாக நடந்த போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். பின்னர் இறந்து போன சினு உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

Tags : electrician ,
× RELATED தாம்பரம் அருகே வாங்கிய கடனுக்கு...