×

குமரியில் வேல் யாத்திரைக்கு புறப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தம்

நாகர்கோவில், டிச.8: குமரியில் வேல் யாத்திரைக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்தும் வகையில் 64 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் திடீரென வாகன சோதனை மேற்கொண்டனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில், தமிழகத்தில் கடந்த மாதம் 6ம் தேதி வேல் யாத்திரை தொடங்கப்பட்டது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வேல் யாத்திரை நடைபெறும் என, அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் கூறி இருந்தார். தமிழக அரசு அனுமதி மறுத்த போதிலும், தடையை மீறி யாத்திரை நடத்தி முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, உடனடியான விடுவிக்கப்பட்டனர். பின்னர் நிவர் புயல் காரணமாக, வேல் யாத்திரை நிகழ்ச்சிகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த, மாநில தலைவர் முருகன், இதன் நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் டிசம்பர் 7ம்தேதி நடைபெறும் என அறிவித்தார். இதற்காக நேற்று முன் தினம் காலையில், பா.ஜ. தலைவர் முருகன் திருச்செந்தூர் வந்தார். நிறைவு யாத்திரையில் தமிழகம் முழுவதும் இருந்து பாரதிய ஜனதா தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிறைவு யாத்திரைக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் யாத்திரையில் பங்கேற்க திருச்செந்தூர் நோக்கி வருபவர்களை முன்கூட்டியே தடுத்து, திருப்பி அனுப்ப காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி  குமரி மாவட்டத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வேல் யாத்திரையில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன் தினம் இரவு முதல் குமரி மாவட்ட எல்லை பகுதிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, ஆங்காங்கே தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலையில் இருந்து மாவட்டத்தின் எல்லை பகுதியான ஆரல்வாய்மொழி மற்றும் அஞ்சுகிராமம் சோதனைச்சாவடிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.  இது தவிர ஒழுகினசேரி, செண்பகராமன்புதூர், இறச்சக்குளம், இரணியல், திங்கள்சந்தை, கண்டன்விளை, தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மொத்தம் 64 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வாகனங்களை போலீசார் அனுமதித்தனர். அதில் தொண்டர்கள் செல்கிறார்களா? என்பதை கண்காணித்தனர். அதன்படி முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  நேற்று காலை திருச்செந்தூர் புறப்பட்டு சென்றார். அவருடன் சென்ற இரு கார்களை மட்டும் அனுமதித்தனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில், பா.ஜ. கொடியுடன் வந்த கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

Tags : pilgrims ,Vail ,Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...