×

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பந்த் புதுச்சேரியில் இன்று பஸ்- ஆட்ேடா ஓடாது வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும்

புதுச்சேரி, டிச. 8: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று (8ம் தேதி) நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆளுங்கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதால் புதுவையில் பஸ், ஆட்டோ, டெம்போக்கள் ஓடாது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருக்கும். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று (8ம் தேதி) நாடு தழுவிய முழுஅடைப்பு (பந்த்) போராட்டத்துக்கு விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது. விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இந்நிலையில் முழு அடைப்பு காரணமாக புதுச்சேரியில் இன்று (8ம் தேதி) தனியார் பஸ்கள் முற்றிலும் ஓடாது. பிஆர்டிசி போக்குவரத்து சேவையும் முழுமையாக இருக்காது. அதுமட்டுமின்றி லாரிகள், ஆட்டோ, டெம்போக்களும் ஓடாது. வேளாண் சார்ந்த வேலை நிறுத்தம் என்பதால் வர்த்தக சங்கங்கள் ஆதரவுக்கரம் நீட்டி உள்ளதால் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருக்கும்.

இதுதவிர பள்ளி, கல்லூரி நிறுவனங்களிடம் போராட்டக்குழுவினர் ஆதரவு திரட்டி வருவதால் அவையும் இயங்காது. அரசு அலுவலகங்கள், வங்கிகள், மருந்து கடைகள் வழக்கம்ேபால் திறந்திருக்கும். அதேபோல் தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லைவரை இயக்கப்படுமென தெரிகிறது. இதற்கிடையே பந்துக்கு ஆதரவு கேட்டு இடதுசாரிகள் அமைப்பினர் ராஜா தியேட்டர் சந்திப்பில் பிரசார பயணத்தை நேற்று தொடங்கினர். புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பிரசார வாகனத்தில் வீதிவீதியாக சென்று முழு அடைப்புக்கு மக்களிடம் ஆதரவு திரட்டினர். முழு அடைப்பையொட்டி அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க ஏடிஜிபி ஆனந்தமோகன் உத்தரவின்பேரில் புதுச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Businesses ,Delhi ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...