×

வீராணம் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் சேதம் முகாம்களில் பாதுகாப்பு இல்லை

காட்டுமன்னார்கோவில், டிச. 8: காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரி மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் சுமார் 4 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஒன்றியங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக குமராட்சி ஒன்றியத்தில் வ.கொளக்குடி, வீரநத்தம், நெய்வாசல், திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், வட்டக்குளம், குமராட்சி, எடையாறு, பிள்ளையார்தாங்கல் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் பழஞ்சநல்லூர், வீராணநல்லூர், திருமூலஸ்தானம், கண்டமங்கலம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்களில் தொடர்ந்து 4 நாட்களாக தண்ணீர் தேங்கி உள்ளது.  பல்வேறு கிராமங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் சுவர்கள் இடிந்து வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மக்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. அரசு தரப்பில் பாதிக்கப்பட்ட மக்களை அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளிலும், சமுதாய கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு போதிய வசதி இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி தலைவர்களிடம் கேட்டபோது அரசு சார்பில் நிதி வழங்கப்
படாததால் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய உணவு உள்ளிட்ட தேவைகளை சமாளிப்பது இயலாத காரியமாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் ஊராட்சிகளுக்கு நிதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
 
அடிப்படை வசதிகள் இல்லை: பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தெரிவிக்கையில்,  பாதுகாப்பு மையங்களில் போதிய வசதிகள் இல்லை. குறிப்பாக கழிப்பிட வசதிகள் இல்லை, பெரும்பாலும் இவைகள் பழைய கட்டிடங்களாக இருப்பதால் தண்ணீர் கசிந்து வருகின்றது. இதனால் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் என தெரிவித்தனர். வெள்ள பாதிப்புகளை பார்வையிட வரும் மத்திய குழு இப்பகுதிகளை முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டும். மேலும் பயிர் காப்பீடு பதிவு செய்யும் தேதியை டிசம்பர் 31 வரை நீட்டிக்க வேண்டும் என அனைத்து பகுதி விவசாயிகளும் கோரிக்கை
வைத்துள்ளனர்.  இந்நிலையில் குமராட்சி அருகே உள்ள வட்டகுளத்தை சேர்ந்த கலியபெருமாள் மனைவி தில்லையம்மாள்(65) என்ற மூதாட்டி தொடர் மழையின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தது அப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : rains ,catchment area ,Veeranam ,paddy damage camps ,
× RELATED சலூன் கடைக்காரரை தாக்கிய வாலிபர் கைது