நாகை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் வரும் 29ம் தேதி நடக்கிறது. செப்டம்பர் 7ம் தேதி பெரிய தேர்பவனி நடக்கிறது. இதையொட்டி பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி துவங்கியது.நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இது கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. வேளாங்கண்ணி பேராலயத்துக்கு பல்வேறு நாடுகள், மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினம்தோறும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பேராயலத்தில் ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு பேராலய பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை நடக்கிறது.
செப்டம்பர் 7ம் தேதி பெரிய தேர்பவனி நடக்கிறது. இந்த விழா காலங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து செல்வர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நடைபயணமாக கிறிஸ்தவர்கள் வந்து செல்வர். ஆண்டு பெருவிழாவையொட்டி பேராலயம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி துவங்கவுள்ளது. இதற்காக சாரம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தவுடன் பேராலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். மேலும் பேராலயத்துக்கு வருவோரின் நலனை கருத்தில் கொண்டு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
