×

மதுரை-நெல்லை இருவழிப்பாதை பணிகள் நிறைவு: புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்

நாகப்பட்டினம்,ஏப்.5: மதுரை-நெல்லை இருவழிப்பாதை பணிகள் நிறைவு பெற்றதால் புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை வேளாங்கண்ணி அல்லது காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும் என ரயில் உபயோகிப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். நாகப்பட்டினம் சுற்றுலா தலங்கள் மற்றும் ஆன்மிக தலங்களின் மைய பகுதியாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோயில், எட்டுக்குடி முருகன் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், 19வது திவ்ய தேசமான சவுந்திரராஜ பெருமாள் கோயில் என ஆன்மிக தலங்கள் நிறைந்துள்ளது.

நாகப்பட்டினம் அருகே காரைக்கால் அம்மையார் கோயில், சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. இதை தவிர சுற்றுலா தலங்களும் நிறைந்துள்ளது. இதனால் ஆன்மீகவாதிகள் வருகைக்கு இணையாக சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். சாலை மார்க்கமாக வந்து செல்வதை விட ரயில் மார்க்கமாக வந்து செல்வதையே சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர். நீண்ட தூர பயணம் செய்யும் ஆன்மிகவாதிகளும் ரயில் பயணங்களையே அதிகம் விரும்புவார்கள். ஆனால் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரயில்கள் மிக குறைவாக வருகின்றது. ஆனால் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரயில்களே இல்லை என்று ரயில் பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இயங்கி ரயில்கள் அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யும் போது நிறுத்தப்பட்டது. எனவே நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் உபயோகிப்பாளர்கள் பல முறை தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. இந்நிலையில் திருநெல்வேலி மதுரை வழித்தடம் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரையில் இருந்து வேளாங்கண்ணி அல்லது காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும் என்று ரயில் உபயோகிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நாகூர் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர் நலச்சங்க செயலாளர் சித்திக் கூறியதாவது: மதுரை புனலூர் ரயில் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை விட மிகவும் குறைவான கிலோமீட்டர் தூரம் மட்டுமே பயணம் செய்கிறது. இதில் 130 கிலோ மீட்டர் தூரம் கேரளத்திலும், 272 கிலோ மீட்டர் தூரம் தமிழகத்திலும் பயணம் செய்கிறது. இந்த ரயிஸ் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட்டு கட்டணம் அதிகரிப்பு செய்த காரணத்தால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஆகவே அனைத்து விதமான பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி திருச்சி வழியாக வேளாங்கண்ணி அல்லது காரைக்கால் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

இதனால் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி செல்லும் அனைத்து ரயில் பயணிகளும் பலன் அடைவார்கள். திருநெல்வேலி மதுரை இடையே இருவழிபாதை நிறைவு பெற்றுள்ளதால் புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நாகப்பட்டினம் வழியாக நீடிப்பு செய்வதால் ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும். இந்த ரயில் மதுரை- விருநகர் பகுதிகளில் இருமார்க்கங்களிலும் மற்ற அதிவிரைவு ரயில்களுக்காக பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டு மெதுவாக பயணம் செய்து அதிகாலை மதுரை சென்றடையும். தற்பொழுது மதுரை திருநெல்வேலி இருவழிப்பாதை பணி நிறைவு பெற்றுவிட்டது.

இதனால் ரொய் என்று இந்த ரயிலை நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ரயில் வேகத்தை அதிகப்படுத்தி வேளங்கண்ணி அல்லது காரைக்கால் வரை நீடிப்பு செய்ய வேண்டும். மேலும் தென் மாவட்டங்களில் இருந்து வோங்கண்ணி அல்லது காரைக்கால் நேரடியாக செல்ல ரயில் வசதி இல்லை. அவ்வாறு இயக்கினால் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மட்டும் இன்றி திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் எளிதாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, நாகர்கோயில் ஆகியவற்றுடன் இணையும். மேலும் திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய பகுதிகளுக்கும் நேரடியாக பயணம் செய்ய முடியும். எனவே பல ஆண்டு காலம் வைத்துள்ள கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

The post மதுரை-நெல்லை இருவழிப்பாதை பணிகள் நிறைவு: புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Madurai- ,Nellai ,Karaikal ,Nagapattinam ,Velankanni ,Madurai-Nellai ,Madurai ,Nellie ,Dinakaran ,
× RELATED மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன்...