×

ரஷித் கான், முகமது ஷமி அசத்தல்: டெல்லியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

புதுடெல்லி: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 163 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசியது. டெல்லி தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், பிரித்வி ஷா களமிறங்கினர். பிரித்வி 7 ரன், அடுத்து வந்த மார்ஷ் 4 ரன் மட்டுமே எடுத்து ஷமி வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். வார்னர் – சர்பராஸ் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 30 ரன் சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய வார்னர் 37 ரன் (32 பந்து, 7 பவுண்டரி) எடுத்து ஜோசப் வேகத்தில் கிளீன் போல்டானார். ஒரு கட்டத்தில் 67 ரன்னுக்கு டெல்லி அணி 4 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது.

இந்த நிலையில், சர்பராஸ் – அபிஷேக் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 34 ரன் சேர்த்தனர். அபிஷேக் 20 ரன் (11 பந்து, 2 சிக்சர்) விளாசி ரஷித் சுழலில் பெவிலியன் திரும்பினார். நல்ல பார்மில் இருக்கும் அக்சரை பின்வரிசையில், அதிலும் நெருக்கடியான கட்டத்தில் களமிறக்கிய டெல்லி அணியின் வியூகம் வியப்பளிப்பதாக இருந்தது. ஒரு முனையில் அக்சர் கடுமையாகப் போராட, சர்பராஸ் கான் 30 ரன் (34 பந்து, 2 பவுண்டரி), எடுத்து ரஷித் பந்துவீச்சில் அவுட்டானார்.
ஆனால் அக்சர் படேல் 36 ரன் (22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஷமி வேகத்தில் மில்லர் வசம் பிடிபட்டார். டெல்லி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. குஜராத் பந்துவீச்சில் ரஷித், ஷமி தலா 3, ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்து தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது. சாய்சுதர்சன்- அதிகபட்சமாக 62 ரன் (48 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி, கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். அவருடன் டேவிட் மில்லர் 31 ரன்(16 பந்து, 2பவுண்டரி, 2 சிக்சர்) ரன் எடுத்தார். இவர்கள் இருவரும் டெல்லி பந்து வீச்சை சிதறடித்து கடைசிவரை களத்தில் நின்று குஜராத் வெற்றிக்கு உதவினர். டெல்லி பந்துவீச்சில் அன்ரிச் 2 விக்கெட் வீழ்த்தினர். மற்ற பவுலர்களின் பந்து வீச்சை சிதறடித்த, குஜராத் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

The post ரஷித் கான், முகமது ஷமி அசத்தல்: டெல்லியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் appeared first on Dinakaran.

Tags : Rashid Khan ,Mohammed Shami ,Gujarat Titans ,Delhi ,New Delhi ,IPL T20 ,Delhi Capitals ,
× RELATED முன்னேறும் முனைப்புடன் குஜராத் – டெல்லி இன்று மோதல்