×

சரக்கு வாகனங்களில் மக்கள் கும்பலாக பயணம்

அரவக்குறிச்சி. ஏப், 5: அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. இதனால்
விதிகளை மீறி விபத்தில் சிக்குகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் திருமணம், காதணி விழா, வளைகாப்பு உள்ளிட்ட குடும்ப விழாக்கள் மற்றும் கோயில் திருவிழாவில் பங்கேற்க பலரும் சரக்கு வாகனங்களில் ஏறி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது போல் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வது மிகவும் ஆபத்தானது என்பதை உணராமல் பொதுமக்கள் இதுபோன்ற பயணங் களை மேற்கொள்கின்றனர்.

நகர் பகுதிகளை விட பெரும் பாலான கிராமங்களில் பொதுமக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி கட்டிட வேலை, விவசாயம், கூலி வேலைக்கு செல்வோர் பெரும்பாலும் சரக்குவாகனத்தில் அதிக அளவில் செல்கின்றனர். அத்துடன் பஸ் போக் குவரத்து குறைவாக உள்ள பல பகுதிகளிலும் சரக்கு வாகனத்தில் பொதுமக்கள் ஏறுவது வாடிக்கையாக உள்ளது. இந்த பயணம் ஆபத்தானது என்பது தெரிந்தும் பலர் சரக்குவாகனங்களில் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். பல்வேறு இடங்களில் சரக்கு வாக னம் விபத்தில் சிக்குகின்றது. பொது மக்கள் சிலர் பலியாகின்றனர். பலர் காயமடைந்து நிரந்தர ஊனமடைகின்றனர்.

ஆனால் இதுபோல் பாதிக்கப்படுவோருக்கு வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தினர் எந்த இழப்பீடு தொகையும் வழங்குவதில்லை. விதிகளின்படி சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லை என்பதால் விதி முறைகள்படி இழப்பீடு வழங்க சம்மதிப்பதில்லை. இருப்பினும் பலரும் அதுபற்றி கவலைப்படாமல் பயணத்திற்கு சரக்கு வாகனங்களை பயன்படுத்துகின்றனர். எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண பொதுமக்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் கடும் அபராதம் விதிப்பதோடு, வாகனங்களை பறி முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இந்த ஆபத்தான பயணம் குறித்து பொதுமக்களுக்கும் காப்பீடு கிடைக்காது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சரக்கு வாகனங்களில் மக்கள் கும்பலாக பயணம் appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...