×

தனது போராட்ட குணத்தால் உயர்ந்துள்ளார் வாரிசு அரசியலால் முதல்வர் இந்த பதவிக்கு வரவில்லை: நடிகர் பார்த்திபன் பேச்சு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை கொளத்தூரில் மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள் என்ற தலைப்பில் பொதுக்கூட்ட விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சித்திக் தலைமை வகித்தார். இதில், அமைச்சர் சேகர்பாபு, நடிகர் பார்த்திபன், முனைவர் பர்வீன் சுல்தானா, கர்நாடக இசைக்கலைஞர் நித்ய மகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நித்தி மகாதேவன் பேசும்போது, நம்முடைய முதல்வரின் மனிதநேயத்திற்கு சான்றாக பள்ளிகளில் காலை உணவு திட்டம் வந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் தன் உடல்நிலை குறித்து அச்சப்படாமல் மக்கள் நலனே பெரிதென்று மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கி மக்களைக் காத்தவர்தான் நம் முதல்வர். மக்கள் நலனுக்காக புதுப்புது திட்டங்களை நிறைவேற்றி வருகிறார், என்றார். முனைவர் பர்வீன் சுல்தானா பேசும்போது, இயல், இசை, நாடக உலகமே வாழ்த்துகின்ற தலைவராக முதல்வர் உள்ளார்.

60 ஆண்டுகளாக தன் வாழ்வையே போராட்ட களத்தில் தொலைத்தவர் நம் முதல்வர். ஒரு ஆண் அரசியலுக்கு வருவதற்கும், ஒரு பெண் அரசியலுக்கு வருவதற்கும் நிறைய வேற்றுமை இருக்கின்றது. நான் மேடையில் பேசுகின்றேன் என்றால் இந்த ஆற்றலை கொடுத்தது இந்த அரசு தான். பெண்களுக்கு உடல் உபாதைகள் அதிகம் என்பதை உணர்ந்த ஒரு பெருந்தகப்பனாக காவல்துறையில், பெண் காவலர்கள் சாலை ஓரங்களில் நிற்க வேண்டாம் என்று முதல் கையெழுத்தை போட்டு உத்தரவு பிறப்பித்த தலைவர் நம் முதல்வர். 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க முணங்கிய அரசுகளுக்கு மத்தியில், 50 சதவீதம் பெண்களுக்கு அரசியல் இட ஒதுக்கீடு கொடுத்த முதல்வர் நம்முடைய முதல்வர். பெண்களின் வலியைப் புரிந்துகொண்டு இலவசப் பேருந்து திட்டத்தை துவக்கிய நம் முதல்வர்தான் நிரந்திர முதல்வராக இருக்க வேண்டும், என்றார். நடிகர் பார்த்திபன் பேசும்போது, முத்தமிழறிஞருக்கு மகனாக பிறந்ததே அவருக்கு பெரிய வாழ்த்துதான். அதை விட வேறு என்ன பெரிய வாழ்த்து இருக்க போகிறது. கொரோனா காலகட்டத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், தானே களத்திற்குச் சென்றார் முதல்வர்.

அவரை நான் ரியல் ஹீரோவாக பார்க்கிறேன். உடலில் மட்டும் அல்ல, மனதளவிலும் ஆரோக்கியமானவர் நம் முதல்வர். எல்லோருக்கும் முன்னோடியாக அவர் இருக்கிறார். முதல்வர் பிறந்தநாள் புகைப்படக் கண்காட்சியில் பல புகைப்படங்களை பார்த்தேன். அதில் அவர் மிகப்பெரிய அரசியல் கட்சி தலைவரின் மகனாக இருந்தாலும், பல துயரங்களுக்கு ஆளாகிய காட்சிகளைக் கண்டேன். அவரது பொறுமை கடலினும் பெரிது. அந்த பொறுமையாலும், தனது போராட்ட குணத்தாலும்தான் இன்று பல இன்னல்களுக்கு மத்தியில் அவர் முதல்வராக உயர்ந்துள்ளார். பல நாட்களாக தன்னுடைய திறமையை மெருகேற்றி அந்த இடத்தை பிடித்துள்ளாரே தவிர, வாரிசு அரசியலால் அவர் பதவிக்கு வரவில்லை, என்றார். நிகழ்ச்சியில் கொளத்தூர் பகுதிச் செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், இளைஞரணி அமைப்பாளர் மகேஷ்குமார், மண்டலக்குழு தலைவர் சரிதா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தனது போராட்ட குணத்தால் உயர்ந்துள்ளார் வாரிசு அரசியலால் முதல்வர் இந்த பதவிக்கு வரவில்லை: நடிகர் பார்த்திபன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Parthiban ,Chennai ,Chief Minister ,M.K.Stal ,Kolathur, Chennai ,Minister's ,Day ,
× RELATED “ஆசி’ர்வதிக்கப்பட்ட தோல்வி” – இறுதி...