மன்னார்குடி, டிச. 7: மூவாநல்லூர் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உயிர் பூஞ்சானக் கொல்லி உரம் கிடைக்கும் என மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் கனமழை காரணமாக தேங்கியுள்ள கொய்யா தாய் செடி நடவு செய்யப்பட்ட வயல் மற்றும் மூவாநல்லூர் சுற்றியுள்ள கிராமங்களின் கத்திரி வயல்கள் மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துள்ள வயல்களை மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குனர் வெங்கடராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வு குறித்து அவர் கூறுகையில், காய்கறி, கத்திரி, மிளகாய் மற்றும் மர வள்ளி போன்ற வயல்களில் தண்ணீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்திடல் வேண்டும். பிறகு நன்கு தண்ணீர் வடித்த பகுதிகளில் செடியின் வேர் பகுதியை சுற்றி டிரைகோடெர்மா விரிடி 10 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கரைசலின் தெளித்தல் மூலம் வேரழுகலில் இருந்து காய்கறி பயிரினை காக்கலாம். இந்த உயிர் பூஞ்சானக் கொல்லி உரம் தேவைப்படுவோருக்கு மன்னார்குடிக்கு அருகிலுள்ள மூவாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் இருப்பில் உள்ளது என்றார். ஆய்வின் போது தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன், தோட்டக்கலை அலுவலர் சூர்யா ஆகியோர் உடனிருந்தனர்.