நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல் மழை காலத்தில் மின் சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும்

திருவாரூர், டிச. 7: திருவாரூர் மாவட்டத்தில் பருவமழை காலத்தின் போது மின் சாதனங்களை பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் கையாளுமாறு மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மின்சாதனங்களை பாதுகாப்பான முறையில் கையாளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன்படி ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும்,

பின்னரும் சுவிட்சை ஆப் செய்துவிட்டு பயன்படுத்த வேண்டும், ஃப்ரிட்ஜ், கிரைண்டர் போன்றவற்றிற்கு உரிய முறையில் எர்த் இணைப்பு வழங்குவதுடன் 3 பின் சாக்கெட் கொண்ட பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

உடைந்த சுவிட்ச், பிளக் போன்றவற்றை உடனடியாக மாற்றி விட வேண்டும் என்பதுடன் பழுதுபட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கேபிள் டிவி வயர்களை மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகே கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். மின்கம்பி அருகில் கொடி கட்டுவது மற்றும் மின்கம்பத்தில் கால்நடைகளை கட்டுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

மின்மாற்றி, மின்கம்பம் மற்றும் துணை மின் நிலையம் ஆகியவற்றின் அருகே செல்வதையும், நிற்பதையும் தவிர்க்க வேண்டும் என்பதுடன் அதன் அருகே சிறுநீர் கழிப்பதையும் தவிர்க்க வேண்டும். இடி மின்னலின் போது டிவி, மிக்சி கிரைண்டர், செல்போன் மற்றும் கணினி போன்றவற்றினை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.  இவ்வாறு பாதுகாப்பான முறையில் மின் சாதனங்களை கையாளும் பட்சத்தில் விபத்துகளை தடுக்க முடியும் என்பதால் பொதுமக்கள் இதனை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.

Related Stories: