×

வெயிலால் வீடுகளில் முடங்கிய மக்கள்

சேலம், ஏப். 5: சேலம் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் மேலாக தகிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் பகல் வேளைகளில் வீடுகளிலேயே முடங்கிகிடக்கும் நிலை உருவானது. அதேநேரத்தில் மாலையில் பெய்த மழையானது மக்களை ஆசுவாசப்படுத்தியது. கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே, சேலம் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. சேலத்தில், நேற்று முன்தினம் 99 டிகிரி ஃபாரன்ஹீட்டாக வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில், நேற்று 98 டிகிரியாக இருந்தது. நாமக்கல், தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் 100 டிகிரியை நெருங்கி வெயில் பதிவாகிறது. இந்த நிலை நீடித்தால் அக்னி நட்சத்திர காலங்களில் உச்ச அளவாக 105 டிகிரியை தாண்டும் என வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.மதிய நேரத்தில் தகிக்கும் வெப்பத்தால், இருசக்கர வாகனங்களில் செல்லும் இளம்பெண்கள் முகத்தை துப்பட்டா, சேலையால் மூடிக்கொண்டும், கைகளில் ‘கிளவுஸ்’ மாட்டிக்கொண்டும் பயணிக்கின்றனர்.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பகல் பொழுதுகளில் கடைவீதிகளில் மக்கள் கூட்டமும் குறைவாகவே காணப்படுகிறது. உஷ்ணத்தால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், உடலில் இருந்து அதிகளவில் வியர்வை வெளியேறி, சீக்கிரத்திலேயே களைப்பும் ஏற்படுகிறது. இதனால் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே இருந்து விடுகின்றனர். பெரும்பாலும் மாலை நேர பயணத்தையே விரும்புகின்றனர். கொளுத்தும் வெயிலால் சேலம் மண்டலத்தில் நுங்கு, இளநீர், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், தர்பூசணி பழம், பழச்சாறு, கரும்புச்சாறு விற்பனையும் அதிகரித்துள்ளன.

அதே நேரத்தில் நேற்று மாலை 6மணிக்கு தொடங்கி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையானது, பகலில் வெயிலில் தகித்த மக்களை சற்று ஆசுவாசப்படுத்தியது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதும் வெப்பநிலை அதிகரிக்க காரணம். மழைப்பொழிவு குறைந்ததாலும் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது. அக்னி நட்சத்திர காலகட்டத்தில் சேலம் மண்டலத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,’’ என்றனர்.

The post வெயிலால் வீடுகளில் முடங்கிய மக்கள் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Mandal ,
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை