நித்திரவிளை, ஆக. 11: நித்திரவிளை அருகே தூத்தூர், கே.ஆர். புரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ஜூலியன் (39). இவர் அயர்லாந்து நாட்டு மருத்துவமனையில் கம்பவுண்டராக (ஆண் செவிலியர்) வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் ஊருக்கு வந்த ஜூலியன் நேற்று முன்தினம் மாலை அவரது பைக்கில் நித்திரவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் ஆலுமூடு பகுதியில் சென்ற போது, தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தொழிலாளர்கள் மீன்பிடி உபகரணங்களுடன், மேற்கு கடற்கரை சாலையில் மினி டெம்போவில் வந்தனர். அந்த மினிடெம்போ, ஜூலியன் பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஜூலியன் மற்றும் பைக், அந்த வழியாக பைக்கில் சென்ற, நித்திரவிளை அடுத்த கோட்டவிளை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சுஜின் (32) மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஜூலியன் மற்றும் சுஜின் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து ஜூலியன் நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், சுஜின் நித்திரவிளையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஜூலியன் நித்திரவிளை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மினி டெம்போ ஓட்டி வந்த மார்த்தாண்டன்துறை நடுவிளாகம் பகுதியை சேர்ந்த பென்னி (30) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
