ஒரத்தநாடு, ஆக.11: ஒரத்தநாடு அருகே சாலையில் கிடந்த விலை உயர்ந்த செல்போனை போலீசிடம் ஒப்படைத்த சிறுமிகளுக்கு சன்மானம் வழங்கி இன்ஸ்பெக்டர் பாராட்டு தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரது மகள்களான தீபிகா 12, சாய்ஷா 10, இருவரும் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன் தினம் மாலை தனது தந்தையோடு பாப்பாநாடு கடைத்தெருவிற்கு பொருட்கள் வாங்க வந்தபோது விலை உயர்ந்த செல்போன் ஒன்று சாலையில் கிடந்துள்ளது.
இதை எடுத்த சிறுமிகள் இருவரும் தனது தந்தையிடம் தெரிவித்து அருகில் உள்ள பாப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரிடம் ஒப்படைத்தனர். செல்போனை பெற்றுக் கொண்ட பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சிறுமிகளை பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்ததோடு, சிறிய சன்மானம் வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். சிறுமிகளின் இந்த செயலை எண்ணி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
