தூத்துக்குடி, ஆக.11:மதுரை வரை இயக்கப்படும் லோக்மான்ய திலக் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும் என பயணிகள் நலச் சங்கத்தினர் கோட்ட ரயில்வே மேலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு ஆய்வுக்கு முதன்முறையாக வருகை தந்த மதுரை ரயில்வே கோட்டத்தின் புதிய கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனாவை தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர் பிரமநாயகம் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், வண்டி எண். 12693-12694 தூத்துக்குடி-சென்னை, சென்னை-தூத்துக்குடி முத்துநகர் ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்க வேண்டும்.தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும், வண்டி எண். 16765-16766 தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை இயங்கும் விரைவு ரயிலை உடனடியாக வாரம் மூன்று முறையாக மாற்ற வேண்டும். மேலும், இந்த ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டி எண்.16791-16792 தூத்துக்குடி-பாலக்காடு, பாலக்காடு- தூத்துக்குடி பாலருவி விரைவு ரயிலில் மூன்று அடுக்கு ஏசி பெட்டி ஒன்றும், இரண்டடுக்கு ஏசி பெட்டி ஒன்றும் இணைக்க வேண்டும். கடந்த 145 ஆண்டுகளாக தூத்துக்குடி-சென்னை இடையே ஒரேஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
