×

கொட்டகுடி ஆறு நீர்வரத்தால் மீனாட்சியம்மன் கண்மாய் நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி

போடி, டிச. 7: தினகரன் செய்தி எதிரொலியால், கொட்டகுடி ஆறு நீர்வரத்தால் மீனாட்சியம்மன் கண்மாய் நிரம்பியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போடி அருகே, மீனாட்சிபுரத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் மீனாட்சியம்மன் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய் நிரம்பினால் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் ஒரு போக நெல் சாகுபடி நடக்கும். கண்மாய்க்கு முறையாக நீர் வரத்து இல்லாததால், நிரம்பாமல் இருந்தது. ஒரு போக சாகுபடிக்கு விவசாயிகள் நெல் நடவுப் பணிகளை முடித்த நிலையில், தண்ணீர் பற்றாக்குறையால் சாகுபடி வீடு வந்து சேருமா என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து விவசாயிகளும் போடி தாசில்தார் அலுவலகத்தில் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க மனு அளித்தனர். இதன் எதிரொலியாக, 2 வாரத்துக்கு முன் போடி தாசில்தார் மணிமாறன், மீனாட்சியம்மன் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்படும் வகையில், தேனி சாலையில் உள்ள சாலைக்காளியம்மன் கோயில் அருகில் உள்ள ஷட்டரை திறந்து விட்டார். தொடர் மழையால் கொட்டகுடி ஆற்றில் கடந்த காட்டாறு வெள்ளம் மீனாட்சியம்மன் கண்மாய்க்கு தடையின்றி சென்றதால் முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Meenakshiamman Kanmai ,river ,Kotagudi ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை