×

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவித்தொகை பெற செப்டம்பர் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ மேகநாத ரெட்டி இ.ஆ.ப., தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் செயற்படுத்தப்பட்டு வரும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டம் மற்றும் வெற்றியாளர் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கென மேற்குறிப்பிடப்பட்ட திட்டங்களில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறும் வகையில் 08.08.2025 காலை 10.00 மணி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 08.09.2025 மாலை 5.00 மணி வரை ஆகும்.

இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனையர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 08.08.2025 முதல் 08.09.2025 மாலை 5.00 மணி வரை சமர்ப்பிக்கலாம். விளையாட்டு வீரர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் வழி மற்றும் நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டம் மற்றும் வெற்றியாளர் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் தற்போது பயனாளிகளாக உள்ளவர்கள் தங்கள் தற்போதைய திட்டத்தை தொடர மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

மேலே குறிப்பிட்ட திட்டங்களில் பயனடைந்து வரும் விளையாட்டு வீரர் /வீராங்கனையர்கள் வெற்றியாளர் மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டம் /தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம், அல்லது பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டத்திலிருந்து, தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பினால் தகுதி நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் புதியதாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டங்களில் பயன்பெற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனையர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் பெற்ற விளையாட்டு சாதனைகள் தகுதியானதாக கருதப்படும்.

வயது பிரிவு அடிப்படையில் பங்கேற்றிடும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் பெற்றிருக்கும் பட்சத்தில், அதற்கான சான்றிதழ் உடன் படிவம் -2 இணைத்து சமர்பித்தால் மட்டுமே தகுதியாக கருதப்படும். மேலும் சர்வதேச அளவிலான சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வீரர்கள் தகுதிச் சான்றிதழ் உடன் படிவம் -1 இணைத்து சமர்பித்தால் மட்டுமே தகுதியாக கருதப்படும். வெற்றியாளர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்கள் கடந்த 2 வருட காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்றிருத்தல் வேண்டும். தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம் மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்கள் கடந்த 4 வருட காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் நேரத்தில் கடந்த 3 மாதங்களில் குறைந்தது 9 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். விண்ணப்பத்தை ஆய்வு செய்யும் நேரத்தில் மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். சுழற்சி முறையில் நடத்தப்படும் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் உலக கோப்பை சாம்பியன்ஷிப், உலக கோப்பை செஸ் சாம்பியன்ஸ் போட்டி, ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய அளவிலான போட்டிகள் அடங்கும். விண்ணப்பித்திடுவதற்கான வயது வரம்பு வெற்றியாளர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அறிவிப்பு தேதியின் படி 20 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவித்திடும் திட்டம் மற்றும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டங்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.

இணைய வழிமூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் அவர்களால் அமைக்கப்பட்ட ஆய்வு குழு மூலம் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையிலான தேர்வு குழுவின் இறுதி ஒப்புதலுக்கு பின்னர் விண்ணப்பதாரர்கள் விதிமுறைகளின் அடிப்படையில் இத்திட்டத்தில் இணைக்கப்படுவர். இவ்வாணையத்தின் விதிகள் மற்றும் 2 ஆண்டுகள் வரை நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதிகபட்சம் இத்திட்டத்திற்கான உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையம் 95140 00777 என்ற தொலைபேசி எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ மேகநாத ரெட்டி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

 

Tags : Tamil Nadu Sport Development Commission ,Tamil Nadu Sports Development Authority ,J Meganatha Reddy E. Yes. P. ,Tamil Nadu Sports ,
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்சமாக...