×

அ.வாடிப்பட்டி பகுதியில் விளைநிலங்களுக்கு ஆற்றை கடந்து செல்லும் விவசாயிகள் பாலம் அமைக்க கோரிக்கை

தேவதானப்பட்டி, டிச. 7: தேவதானப்பட்டி அருகே, அ.வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு செல்ல, வைகை ஆற்றை கடந்து செல்கின்றனர். இதனால், மழை காலங்களில் அவதிப்படுகின்றனர். எனவே, ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி பகுதியில் மேலவாடிப்பட்டி, ரெங்கநாதபுரம், அ.புதூர், வெங்கட்ராமபுரம், வேளாயுதபுரம், ஐந்து ஏக்கர் காலனி, எழுவனம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 20 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமங்களுக்கு மையப்பகுதியாக அ.வாடிப்பட்டி கிராமம் உள்ளது.

இப்பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் முக்கியத் தொழிலாக உள்ளது. இப்பகுதி கிராம மக்கள் அருகில் உள்ள ஆண்டிபட்டிக்கு செல்ல, அ.வாடிப்பட்டியில் இருந்து வைகை அணைக்கு சென்று, அங்கிருந்து செல்கின்றனர். இப்பகுதி விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு வைகை ஆற்றை கடந்து செல்கின்றனர். மழை காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும்போது ஆற்றை கடந்து செல்ல அவதிப்படுகின்றனர். இதனால், 20 கி.மீ சுற்றி செல்கின்றனர். எனவே, அ.வாடிப்பட்டி அருகே உள்ள வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அ.வாடிப்பட்டி விவசாயி பெருமாள் கூறுகையில், ‘எங்களது விவசாய நிலம் வைகை ஆற்றிற்கு அந்தப் பக்கம் உள்ளது. மழை காலங்களில் ஆற்றை கடக்க முடியவில்லை. இதனால், 20 கிலோ மீட்டர் சுற்றி செல்கிறோம். விவசாயத்துக்கு தேவையான இடுபொருட்களை எடுத்துச் செல்வதில் சிரமம் உள்ளது. மழை காலங்களில் ஆற்றை கடந்து விளைநிலங்களுக்கு செல்லும்போது உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி அ.வாடிப்பட்டி அருகே வைகை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : bridge ,river ,area ,A.Vadipatti ,farmland ,
× RELATED பசுபதிபாளையம் பாலம் அருகே அமராவதி...