×

உளுந்து பயிர்களில் மஞ்சள் நோய்

சிதம்பரம், ஏப். 5: குமராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் சிதம்பரம் வட்டம் சிவபுரி, பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், மடத்தான்தோப்பு ஆகிய பகுதிகளில் உளுந்து பயிரில் மஞ்சள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில், குமராட்சி வேளாண்மை உதவி இயக்குனர் அமிர்தராஜ், துணை வேளாண்மை அலுவலர் நடராஜன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் மாலினி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதை தொடர்ந்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுவாக கோடை காலங்களில் மஞ்சள் நோயின் பாதிப்பு உளுந்து பயிரில் காணப்படும். இவை வெள்ளை ஈக்கள் மூலமாக மஞ்சள் நோய் நச்சுயிரியை ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பரப்புகிறது. இதனை கட்டுப்படுத்திட உளுந்து பயிர்களில் ஆரம்ப நிலையில் மஞ்சள் நோய் தாக்கிய செடிகளை வேரோடு பிடுங்கி எரித்து அழித்து விட வேண்டும். மேலும் விதைப்பு செய்யும்போது உளுந்து விதைகளை இமிடா குளோபிரிட் 70 டபுள்யு எஸ் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி லிட்டர் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைப்பு செய்ய வேண்டும். மஞ்சள் நோய் தாக்குதலை தாங்கி வளரக்கூடிய நோய் எதிர்ப்பு ரகங்களான வம்பன்-8, வம்பன்- 10, வம்பன்- 11 ஆகிய ரகங்களை விதைப்பு செய்யலாம். தேவை இருப்பின் தையோ மெத்தாக்சிம் 75 டபிள்யுஎஸ் மருந்தை மூன்று லிட்டர் தண்ணீரில் 1 கிராம் என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலமாக நச்சுயிரியை பரப்பும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம், என்றனர்.

The post உளுந்து பயிர்களில் மஞ்சள் நோய் appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Kumaratchi Union ,Chidambaram Circle Sivapuri ,Perambattu ,Thithukkattur ,Madathanthopu ,
× RELATED சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இரு குடும்பத்தினர் மோதல்- பரபரப்பு