சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்டில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு தொற்றுநோய் அச்சத்தில் பயணிகள்

இளையான்குடி, டிச.7:  சாலைக்கிராமத்தில் தேங்கும்  கழிவுநீரால், தொற்றுநோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமத்திற்கு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கிராமமக்கள் பல்வேறு வகையான பொருட்கள் வாங்குவதற்கு வந்துசெல்கின்றனர். சிவகங்கை, காரைக்குடி, பரமக்குடி, தேவகோட்டை, மதுரை, ஆர்எஸ். மங்கலம் ஆகிய இடங்களுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சாலைக்கிராமம் வழியாக இயக்கப்படுகின்றன. தினமும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட் படுமோசமாகவும், குண்டும் குழியுமாக உள்ளது. மழை நீர் வடிய போதிய வசதியில்லாததால் கழிவுநீராக சாலைகளில் தேங்கியுள்ளது. நீண்ட நாட்களாக தேங்கும் இந்த கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்றுநோய் பரவும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பஸ் ஸ்டாண்டை விரிவாக்கம் செய்து, தரம் உயர்த்தி, பேவர் பிளாக் கல் பதிப்பதற்கு ஆயத்தமான நிலையில், ஆக்கிரமிப்பை அகற்றாமல், தொடர் நடவடிக்கை எடுக்காமல் அலுவலர்களின் அலட்சியத்தால் இதுவரை கிடப்பில் உள்ளது. அதனால் பஸ் ஸ்டாண்ட் பகுதி கழிவு நீர் தீவு போல உள்ளது. அதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அச்சத்தில் உள்ளனர். சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேங்கும் கழிவுநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>