×

நூறுநாள் வேலை வழங்க கோரி செந்துறை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சுமூகம்

அரியலூர், ஆக.9: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், 100 நாள் வேலை கேட்டு செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, நேற்று முற்றுகையிட வந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையடுத்து, மனு அளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றனர். அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த பாளையக்குடி ஊராட்சி, வாளரக்குறிச்சி கிராம மக்களுக்கு, மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

வேலைக் கேட்டு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க ஒன்றியச் செயலர் அறிவழகன் தலைமையில் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட வந்தனர். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், அடுத்த வாரத்தில் வேலை வழங்கப்படும் என தெரிவித்ததையடுத்து, வேலை வழங்கக்கோரி மனு அளித்துவிட்டு போராட்டத்தைக் கைவிட்டு திரும்பிச் சென்றனர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் அர்ஜூனன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, செண்பகவல்லி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Senthurai Panchayat Union ,Ariyalur ,
× RELATED ஓய்வூதியர் தின விழா