நாகப்பட்டினம், ஆக.8: வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் கடற்கரை பகுதிகளில் உள்ள குப்பைகளை தூய்மை செய்ய புதிய இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு சுற்றுலா வரும் பயணிகள் வேளாங்கண்ணி கடற்கரையில் தங்களது குடும்பத்தோடு அமர்ந்து பொழுதை கழித்து செல்கின்றனர்.
அவ்வாறு கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணிகள் குப்பைகளை விட்டு செல்கின்றனர். இந்த குப்பைகளை அகற்றுவதற்காக ரூ.94 லட்சம் மதிப்பில் தூய்மை செய்யும் இயந்திரத்தை முதல்வர் வழங்கினார். இதனை தொடர்ந்து அந்த இயந்திரத்தை வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானாஷர்மிளா வழங்கி சிறப்பித்தார். இதில், பேரூராட்சி துணை தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
