மண்டபம்,ஆக.8: மண்டபம் அருகே வேதாளை ஊராட்சி 2வது வார்டு குஞ்சார் வலசை கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை ராமேஸ்வரம், ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை கிராமத்தின் நடுவே அமைந்துள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அதிகாலையில் கடல் தொழில் செல்லும் மீனவர்கள் கட்டிடத் தொழிலாளிகள் முதல் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாலும், இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். ஆதலால் சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைத்து புதிய சாலை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அப்பகுதி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
