×

அந்தியூர் அருகே யானை மிதித்து நெற்பயிர்கள் சேதம்

அந்தியூர்,டிச.7: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கோவிலூர் புதுக்காடு பகுதி வனப்பகுதி எல்லையோரம் உள்ளது. இப்பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்து வருவதால், தோட்டங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர். நடவு செய்து இரண்டு மாதம் ஆனதால், நெல் கதிர் விடும் நிலையில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென ஒற்றை யானை கோவிலூர் புதுக்காடு பகுதியில் உள்ள வயலில் இறங்கி நெற்பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.

இதில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் யானை மிதித்து சேதமாகி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் இரவு நேரங்களில் இப்பகுதியில் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து வருவதாக, அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் வனப்பகுதி எல்லையோரங்களில் உள்ள அகழிகளை முறையாக வனத்துறையினர் பராமரித்து, அகலப்படுத்தி, மின் வேலிகள் அமைத்து விவசாய நிலங்களை வன விலங்குகளிடமிருந்து காக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Tags : Anthiyur ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; 12 பேர் கைது