×

பாலாற்றில் குளித்தபோது சகோதரிகள் உள்பட 3 சிறுமிகள் மாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குருவிமலை பாலாற்றில் குளித்த அக்கா, தங்கை உள்பட3 சிறுமிகள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். வடகிழக்குப் பருவமழை மற்றும் நிவர் புயலால் கடந்த வாரம் கனமழை பெய்தது. மேலும், வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு திறந்ததால், பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்று தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு வெள்ளமாக ஓடியது இந்நிலையில் காஞ்சிபுரம், தும்பவனம் விநாயகர் கோயில் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. அரசு மருத்துவமனை ஊழியர். இவரது மகள்கள் ஜெய  (16), சுபா (15), அதே பகுதியில் வசிக்கும் பூரணி (14).

நேற்று மதியம் மேற்கண்ட 3 சிறுமிகள் உள்பட 4 பேர், குருவிமலை பாலாற்றில் குளிக்க சென்றனர். அப்போது, 3 பேரும் ஆழம் தெரியாமல் மணல் அள்ளப்பட்ட பகுதியில் சிக்கி, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். நீண்ட நேரமாக சிறுமிகள் ஆற்றில் இருந்து வராததால், கரையில் இருந்த பூரணியின் உறவினர் அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, ஆற்றில் மாயமான 3 சிறுமிகளை தேடினர். ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : girls ,sisters ,
× RELATED ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சேத்துப்பட்டு அருகே