×

முந்திரி கொட்டை தருவதாக வியாபாரியிடம் ரூ.11.93 லட்சம் மோசடி செய்தவர் கைது

கடலூர், ஆக. 7: முந்திரி கொட்டை தருவதாக ரூ.11.93 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் மாவட்டம் கீழக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் முந்திரி கொட்டையை உடைத்து பதப்படுத்தி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் காந்திநகரை சேர்ந்த பெரியசாமி (38) என்பவர், செல்வகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு, 50 டன் முந்திரிகொட்டை தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய செல்வகுமாரும் 4 தவணையாக பெரியசாமிக்கு ரூ.12 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் முந்திரிகொட்டை தராமல் பெரியசாமி ஏமாற்றி வந்துள்ளார்.

இதனால் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பெரியசாமியிடம் கேட்டதற்கு, ரூ.80 ஆயிரம் மட்டும் செல்வகுமாருக்கு கொடுத்துவிட்டு, மீதி பணத்தை விரைவில் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து நீண்ட நாள் கழித்து மீதமுள்ள ரூ.11 லட்சம் 93 ஆயிரத்தை கேட்டதற்கு பெரியசாமி பணம் தர முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து செல்வகுமார் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு போலீசார் பண மோசடி வழக்கு பதிவு செய்து, பெரியசாமியை நேற்று போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Cuddalore, Aga ,Selvakumar ,Kalakupam ,Cuddalore district ,Peryasami ,Kadampulyur Gandhi Nagar ,Panruti ,Beryasami ,
× RELATED ஓய்வூதியர் தின விழா