×

குளிர், காற்று, மழை என முக்கோண வானிலை தாக்குதலால் மலைக்கோட்டை மாநகர் மழைக்கோட்டையாக மாறியது


திருச்சி, டிச.4: கடந்த 2 தினங்களாக தொடர்ந்து பெய்யும் மழையால் திருச்சி மலைக்கோட்டை மாநகர் மழைக்கோட்டை மாநகராக காட்சியளிக்கிறது. தொடர்ந்து குளிருடன் மழை பெய்வதால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். நேற்று முன்தினம் மாலையிலிருந்து குறிப்பிடத்தக்க வேகத்தில் தொடர்ந்து காற்று வீசி வருகிறது. குளிர், மழை, காற்று என முக்கோண வானிலை மாற்றத்தாக்குதலால் மாவட்டம் முழுவதும் ஊட்டி, கொடைக்கானல் போல சில்லென்று உள்ளது. இந்த கிளைமேட்டை பலர் கொண்டாடி வந்தாலும், கொரோனாவால் பாதித்து இருமல், சளி, காய்ச்சலால் அவதிப்படும் நோயாளிகளுக்கு இந்த சீதோஷன நிலையை எதிர்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.

சாலைகளில் நீர் வழிந்தோடுவதோடு, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி செல்ல வழியில்லாமல் குளம்போல காட்சியளிக்கிறது. பல இடங்கள் சேறும், சகதியுமாக மாறி உள்ளன. நேற்று காலை முதல் பல இடங்களில் மழை விடாமல் பெய்து வந்தது. இரவிலும் மழை தொடர்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது மழை பொழிவு இருந்தாலும், ஏரி, குளம், கிணறு நீர் நிலைகள் பெரும்பாலும் நிரம்பாமல் உள்ளது. இனி பெய்யும் மழையால் நீர் நிலைகள் நிரம்பினால் மட்டுமே கோடையை சமாளிக்க முடியும் என்ற நிலை தான் திருச்சியை பொருத்தவரை உள்ளது. இன்றும் மழை தொடரும் பட்சத்தில் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகள் நீர் சூழும் நிலை உள்ளது.

Tags : rainforest ,hill fort ,
× RELATED நிலையான வாழ்வளிப்பார் மலைக்கோட்டை பிள்ளையார்