×

கொடிக்கம்பங்கள் வைக்க தனிப்பகுதி உருவாக்கலாமா? ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: பொது இடங்களில் கொடிக்கம்பங்களை வைக்க தனிப்பட்ட பகுதிகளை உருவாக்குவது சாத்தியமா என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை தனி நீதிபதி கடந்த ஜன. 27ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்த மனுவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது.

இதை எதிர்த்து, தங்கள் கட்சி கொடியை அகற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை மூன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சவுந்தர், விஜயகுமார் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டுமென்றும், ஆக. 5க்குள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும் கூறியிருந்தது. இதையடுத்து அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக, திக, மமக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தவெக சார்பில் ஏற்கனவே இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், விஜயகுமார், சவுந்தர் ஆகியோர் கொண்ட 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பில், ‘‘பட்டா நிலங்களில் கட்சி கொடிக்கம்பங்களை வைக்க அனுமதி வழங்க வேண்டும். பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்றக்கூடாது. உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது. அரசு தரப்பில், ‘‘மதுரை மாவட்டத்தில் 90 சதவீதம் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டன. தற்போது நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவால் அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் வாதங்களைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் தேவையான வழிமுறைகளை வழங்கினால், அதன் பின் அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள் அமைப்பது குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அரசு தயாராக உள்ளது’’ என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல், பூங்கா போன்ற பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் வைக்க தனிப்பட்ட பகுதிகளை உருவாக்குவது சாத்தியமா?. அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பொது இடங்களில் அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அமைப்பதை பொது நலன் அடிப்படையில் அணுகுகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரம், இதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தான் வகுக்க வேண்டும். அரசியல் கட்சி கொடி கம்பங்களை அமைப்பதில் போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்றனர். பின்னர், இடையீட்டு மனுதாரர்கள் தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும என உத்தரவிட்டு விசாரணையை ஆக.13க்கு தள்ளி வைத்தனர்.

* கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் விதிமுறை வகுக்க வேண்டும்
விசாரணையின்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘மிகவும் முக்கியமான நாட்களில் நடிகர்கள், அரசியல் கட்சிகளின் தொண்டர்கள், 60 அடி உயரத்திற்கு கட்-அவுட் வைத்து அதன் மேல் பாலாபிஷேகம் செய்கிறார்கள். எனவே, கட்-அவுட் அமைப்பதற்கு உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : High Court ,Madurai ,Tamil Nadu ,
× RELATED விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து...