×

அடுத்தடுத்து பின்னடைவு திருச்சியில் இம்மாதம் ஓபிஎஸ் அணி மாநாடு? அனுமதி கேட்டு கடிதம்

திருச்சி: அரசியலில் அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வருவதால், நிர்வாகிகளை தன்பக்கம் தக்க வைக்க ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் இம்மாதம் இறுதியில் மாநாடு நடத்த திட்டமிட்டு, அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால், தற்போது இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், பெரும்பாலான கட்சியினர், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளனர்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அரசியல் ரீதியாக அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, திருச்சி பொன்மலை ஜி.கார்னரில் இம்மாத இறுதியில் மாநாடு நடத்த ஓபிஎஸ் முடிவு செய்து உள்ளார். ஜி கார்னர் ரயில்வே இடம் என்பதால், ரயில்வே நிர்வாகத்திடம் 5 நாட்களுக்கு அனுமதி கேட்டு ஓபிஎஸ் அணி சார்பில் கடிதம் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஓபிஎஸ் அணியியை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகையில், ‘ஜி.கார்னரில் ஓபிஎஸ் நடத்தும் மாநாடு திருப்பு முனையை ஏற்படுத்தும். எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழாக்கள், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான அனைத்து வேலைகளும் நடந்து வருகின்றன. மாநாடு தேதி மட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை. மாநாட்டில், அதிகளவு தொண்டர்களை கூட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளோம்’ என்றனர்.

The post அடுத்தடுத்து பின்னடைவு திருச்சியில் இம்மாதம் ஓபிஎஸ் அணி மாநாடு? அனுமதி கேட்டு கடிதம் appeared first on Dinakaran.

Tags : OPS team ,Trichy ,O. Panneerselvam ,Dinakaran ,
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டி.டி.வி....