×

சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தஞ்சை, டிச. 4: தஞ்சை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இலங்கை அருகே நிலை கொண்டுள்ள புரெவி புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 1.20 லட்சம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி முடிந்துள்ளது.

இப்பயிர்களில் 50 சதவீத பயிர்கள் நட்டு 20 நாட்களே ஆகிறது. இப்பயிர்களை மழைநீர் மூழ்கடித்தால் கண்டிப்பாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் இப்பயிர்கள் அமைந்துள்ள வயல்களில் மழைநீர் தேங்காத வகையில் விவசாயிகள் நீரை வடித்து வருகின்றனர். திருவையாறு பெரமூர் கிராமத்தில் ஒரு வீடு, திருப்பழனம் கிராமத்தில் ஒரு வீடு, வளப்பக்குடி கிராமத்தில் ஒரு வீடு, கடுவெளி கிராமத்தில் ஒரு வீடு, நடுக்காவேரி கிராமத்தில் ஒரு வீடு, கண்டியூர் கிராமத்தில் 2 வீடுகள் இடிந்து சேதமானது. கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திருவிடைமருதூர், திருப்பனந்தாள், சோழபுரம், ஆடுதுறை, கபிஸ்தலம், மெலட்டூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரில் மரம் முறிந்து மின் கம்பி மீது சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை, மதுக்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீருடன் சாக்கடையும் கலந்து ஓடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தொடர் மழையால் பட்டுக்கோட்டை நகரில் 25 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியான மார்க்கெட் செல்லும் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் தேங்கியது. அதிராம்பட்டினம் கடற்கரை பகுதிகளான தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் உள்ள பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அதிராம்பட்டினம் நகர் பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பேரூராட்சி நிர்வாகம் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தஞ்சை மாநகர் உட்பட மாவட்டம் முழுவதும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மேலும் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அடாத மழை கொட்டி தீர்த்தது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. நேற்று பகல் முழுவதும் தொடர் மழை பெய்தது. இதனால் தஞ்சை மாநகரில் கீழவாசல், அண்ணா சிலை, ரயிலடி, புதிய பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. மேலும் குளிர்ந்த காற்று வீசியதால் இரவு கடும் குளிர் நிலவியது. இதேபோல் மழை தொடர்ந்தால் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Tags : places ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்