தஞ்சை பெரிய கோயில் அருகே கல்லணை கால்வாய் பாலத்தை பதம் பார்க்க துடிக்கும் மரம், செடிகள்

தஞ்சை, டிச. 4: தஞ்சை பெரிய கோயில் அருகே கல்லணை கால்வாய் பாலத்தில் முளைத்துள்ள மரம், செடிகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை பெரிய கோயில் அருகில் உள்ள கல்லணை கால்வாயில் 75 ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து வசதிக்காக பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக புதிய பேருந்து நிலையம், திருச்சி, கோவை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட கனரக வாகனம் முதல் இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. தஞ்சை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருந்ததால் பல லட்ச ரூபாய் மதிப்பில் பழைய பாலத்துக்கு அருகில் மற்றொரு பாலம் கட்டப்பட்டது.

இந்த கல்லணை கால்வாயில் உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மரம், செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் பாலத்தின் நிலை கேள்விக்குறியாகி வருகிறது. இந்த பாலத்தின் வழியாக அதிகாரிகள் சென்று வந்தாலும் மரம், செடிகள் வளர்ந்துள்ளதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். மரம், செடிகளால் பாலத்தில் விரிசல் விட்டு போக்குவரத்து தடைப்பட்டால் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்படும். எனவே கல்லணை கால்வாய் பால பக்கவாட்டு சுவரில் வளர்ந்துள்ள மரம், செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>