×

மாவட்ட செயலாளர் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக செயற்குழு கூட்டமும் திடீர் ரத்து: எடப்பாடி அறிவிப்பால் நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு, 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எடப்பாடியின் இந்த முடிவால் நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். இதற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருவரும் எதிரும் புதிருமாக செயல்பட்டனர். இந்நிலையில், எடப்பாடி அணியினர் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டே நீக்கினர்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்றமும் பொதுக்குழு கூட்டப்பட்டது மற்றும் அதில் நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லும் என்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அதிமுகவின் பொதுச்செயலளராக எடப்பாடி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தற்போது, அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் அதாவது எடப்பாடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 7ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி 4 நாட்களுக்கு முன் அறிவித்தார்.

ஆனால், நேற்று முன்தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, அதிமுக செயற்குழு கூட்டம் 7ம் தேதி பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று எடப்பாடி அறிவித்து இருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை அதிமுக தலைமை கழகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘‘அதிமுக செயற்குழு கூட்டம் வருகிற 7ம் தேதி (வெள்ளி) நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஒரு சில காரணங்களால், 7ம் தேதி நடைபெறுவதாக இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது’’ என்று அறிவித்துள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் வருகிற 7ம் தேதி நடைபெறும் என்பதால், இந்த கூட்டத்தில், 2024ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்படும் என்று நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்தனர். காரணம், அதிமுக கூட்டணியில் பாஜ உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று டெல்லியில் பாஜ மூத்த தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார். ஆனால், தமிழக மாநில பாஜ தலைவர் அண்ணாமலை, பாஜ தனித்து போட்டியிடும் என்றார். பின்னர் கூட்டணி என்றார். மேலும், அதிமுக தலைவர்களை அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

அதேநேரம், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழகத்தில் 9 தொகுதிகளை குறிவைத்து பாஜ வேலை செய்து வருகிறது என்று கூறியுள்ளார். அதனால் வருகிற தேர்தலில் பாஜ 9 தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில்வருகிற 7ம் தேதி சென்னையில் நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிமுக – பாஜ கூட்டணி குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற 7ம் தேதி பெரிய வெள்ளியாகும். அதனால் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டாலும், ரத்து செய்ததற்கான காரணம் தெரிவிக்கப்படாததால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஏற்கனவே மாவட்ட செயலாளர் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, செயற்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மாவட்ட செயலாளர் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக செயற்குழு கூட்டமும் திடீர் ரத்து: எடப்பாடி அறிவிப்பால் நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi ,Chennai ,Edappadi Palaniswami ,general secretary ,
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்