×

கோடை சீசனுக்கு தயாராகும் ரோஜா பூங்கா

ஊட்டி,டிச.4:கோடை சீசனுக்காக ஊட்டியில் ரோஜா பூங்கா தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆண்டு தோறும் நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் (முதல் சீசன்) அனுசரிக்கப்படுகிறது. இச்சமயங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டியில் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.  ஊட்டி விஜயநகரம் பகுயில் உள்ள ரோஜா பூங்காவில் 40 ஆயிரம் ரோஜா செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும் வகையில் செடிகள் கவாத்து செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படும்.

40 ஆயிரம் செடிகளில் 4 ஆயிரம் வகை ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இம்முறை கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ரோஜா கண்காட்சி நடத்தப்படவில்லை. தற்போது சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஊட்டிக்கு சுறு்றலா பயணிகள் வருகின்றனர். இதனால், வரும் 2021 மே மாதம் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி ஆகியவை நடத்த அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரியில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யும் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிது. இதன் ஒரு பகுதியாக தற்போது ஊட்டி ரோஜா பூங்காவும் கோடை சீசனுக்காக தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. முதலாவது மற்றும் டெரஸ் பாத்திகளில் உள்ள ரோஜா செடிகள் கவாத்து செய்யும் பணிகள் முடிந்துள்ளது. இந்த செடிகளில் வரும் பிப்ரவரி மாதம் முதல் ரோஜா மலர்கள் பூக்கத் துவங்கும். இதுதவிர மற்ற பாத்திகளில் உள்ள செடிகளில் ஓரிரு வாரங்களில் கவாத்து செய்யப்படவுள்ளது. இப்பணிகள் நடந்து வரும் நிலையில், பூங்காவில் உள்ள புல் மைதானத்தை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

நாள் தோறும் புல் மைதானத்தில் புற்கள் அகற்றப்பட்டு சமன் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நீலகிரியில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், பச்சை கம்பளத்தை விரித்தார் போல், ரோஜா பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் காட்சியளித்து வருகின்றன. முதல் சீசனின் போது, பச்சை பசேல் என காட்சியளிக்கும் வகையில் புல் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இது தவிர, பூங்காவில் உள்ள அலங்கார செடிகள் பனியால் பாதிக்காமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மூடப்பட்டுள்ளன.

Tags : Rose garden ,
× RELATED ஊட்டியில் மலர் நாற்று உற்பத்தி தீவிரம்