×

துபாயில் சர்வதேச காகித கண்காட்சியில் புதிய தொழில்நுட்பம்: தமிழருக்கு பாராட்டு


துபாய்: துபாயில் புரோபேப்பர் துபாய் 2024 என்ற தலைப்பில் 3 நாள் காகித தொழில் வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. இதில் பங்கேற்று பேசிய தமிழகத்தை சேர்ந்த டூபாட் வணிக குழுவின் வர்த்தக இயக்குனர் ராஜமகேந்திரன் டிஷ்யூ பேப்பர் ரோல் பேக்கிங் செய்வதில் புதுமையான வழி பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். துபாயில் பெஸ்டிவல் சிட்டியில் உள்ள பெஸ்டிவல் அரேனா வளாகத்தில் நடந்த இந்த காகித தொழில் வர்த்தக கண்காட்சியில் காகிதம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் புதுமையான தீர்வுகளை காட்சிப்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்டது.

துபாயில் வர்த்தக பேரவை (துபாய் சேம்பர்ஸ்) ஆதரவின் கீழ் பேப்பர் மற்றும் டிஷ்யூ பேப்பர்களுக்கான டூபாட் என்ற வணிக குழுவின் அறிமுக நிகழ்ச்சி இந்த கருத்தரங்கில் நடந்தது. இதில் புதிதாக பொறுப்பேற்ற டூபாட் நிர்வாக குழு இயக்குனர்களுக்கு துபாய் வர்த்தக பேரவை சார்பில் அதன் வணிக கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ஒமர் கான் பாராட்டு தெரிவித்து நினைவு பரிசினை வழங்கி கவுரவித்தார். இந்த வணிக குழுவில் வர்த்தக இயக்குனராக எமிரேட்ஸ் இண்டஸ்டிரியல் கன்வெர்ட்டிங் தொழிற்சாலையின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜமகேந்திரன் பொறுப்பேற்றார்.

தமிழகத்தை சேர்ந்த இவர் ‘ஒரு பயனரின் பார்வையில் டிஷ்யூ பேப்பர் மாற்றத்தில் புதுமைகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, நிலைத்தன்மையை நோக்கிய சிறு அடியை எடுத்து வைக்கும் எனது புதுமையான யோசனையை இங்கு கொண்டு வந்துள்ளேன். சாதாரணமாக கழிவறை, குளியலறைகளில் பயன்படுத்தும் டிஷ்யூ ரோல்களை பேக்கிங் செய்வதில் சில மாற்றங்களை செய்து புதிய வழி ஒன்றை உருவாக்கி உள்ளேன். தற்போது இந்த டிஷ்யூ ரோல்கள் விர்ஜின் தரத்திலான குறைந்த அடர்த்தியில் மெல்லிய பாலித்தீன் பைகள் கொண்டு பேக்கிங் செய்யப்படுகிறது.

அதனை மாற்றி நிலைத்தன்மை வாய்ந்த, 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை எமிரேட்ஸ் இண்டஸ்ட்ரியல் கன்வெர்ட்டிங் தொழிற்சாலையில் உருவாக்கி உள்ளோம்.
இந்த பைகள் நடப்பு மாதத்தில் இருந்து சந்தைக்கு வருகிறது. நிலைத்தன்மை வாய்ந்த உலகை நோக்கிய சிறு அடியாக இந்த முயற்சி உள்ளது. நடப்பு ஆண்டில் வளைகுடா நாடுகளில் குளியலறை டிஷ்யூ பேப்பர் சந்தையின் மதிப்பு 1,407 மில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு டன் எடையுள்ள டிஷ்யூ பேப்பர் ரோலை பேக்கிங் செய்ய 7 கிலோ விர்ஜின் தரத்திலான பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகிறது.

எனவே இதில் வளைகுடா நாடுகள் முழுவதும் கணக்கிட்டால் நம்மால் 8 ஆயிரத்து 400 டன் எடையுள்ள விர்ஜின் தர பாலித்தீன் பைகளை குறைக்க முடியும். இதற்கான துல்லியமான தரவுகளுக்காக ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். சர்வதேச தொழிலதிபர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர் இந்த கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.

The post துபாயில் சர்வதேச காகித கண்காட்சியில் புதிய தொழில்நுட்பம்: தமிழருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : DUBAI ,ProPaper Dubai 2024 ,Rajamakendran Tissue ,Paper ,Roll ,Tubot Business Group ,Tamil Nadu ,International Paper Fair ,
× RELATED “Divorce” பர்ஃப்யூம் அறிமுகம்.. விவாகரத்து...