×

புதிய பள்ளி கட்டிட வகுப்பறைகளில் வரலாற்று வரைபடங்கள் தமிழ், ஆங்கில எழுத்துக்கள் கற்றல் திறனில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்

*நினைவாற்றலை அதிகரிக்க நடவடிக்கை

கலசபாக்கம் : புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறைகளில் வரலாற்று வரைபடங்கள் தமிழ், ஆங்கில எழுத்துக்கள் என பல்வேறு வண்ண ஓவியங்கள் வரைந்ததின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்துள்ளதால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் கல்வித்துறை அமைச்சராக இருந்து எண்ணற்ற பல சாதனைகளை அந்த துறையில் செய்தவர் பேராசிரியர் அன்பழகன். அவருடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடும் தருணத்தில் ரூ.7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கியதின் மூலம் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளது.

இன்றைக்கு பள்ளி கல்வித்துறையில் பணி முக்கியமானதாக இருக்கிறது. தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2வது இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. முதல் இடத்திற்கு முந்துவதற்கான அனைத்து பணிகளையும் பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கம் ஒன்றியத்தில் பாடகம் ஊராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளில் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கில தமிழ் எழுத்துக்கள் வரலாற்று ஓவியங்கள் என்னும் எழுத்தும் திட்டம் குறித்த தகவல்கள் விலங்குகள் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வண்ண ஓவியங்கள் வகுப்பறையில் சுவர்களில் வரையப்பட்டுள்ளது.

மாணவர்கள் வகுப்பறையில் இதனை பார்க்கும்போது மனதில் ஆழமாக எழுத்துக்கள் பதிய வாய்ப்புள்ளது. மேலும் ஆசிரியர்கள் வகுப்பறையில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை தினந்தோறும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி விளக்குகின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் போது ஓவியங்களை காட்டி விளக்குவதின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்து வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் கற்றல் திறனை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே என்னும் எழுத்தும் திட்டத்தின் மூலம் 90 சதவீதம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரித்துள்ளதால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் செலுத்துவதால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பள்ளி வகுப்பறை கட்டிடங்களில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் மாணவர்கள் தங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி கல்வி கற்பதால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உளவியல் ரீதியாக வண்ண ஓவியங்கள் பயனுள்ளதாக இருப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

The post புதிய பள்ளி கட்டிட வகுப்பறைகளில் வரலாற்று வரைபடங்கள் தமிழ், ஆங்கில எழுத்துக்கள் கற்றல் திறனில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Minister of Education ,Tamil Nadu ,
× RELATED ஒருவர் இந்துவா? இல்லையா? என்பதை அறிய...